தமிழக அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு முதல்முறையாக
ராக்கெட் அறிவியலை அறிமுகம் செய்யும் இணைய வழி தொடக்க நிகழ்வு
பத்மபூஷன் சிவதாணு பிள்ளை உரையாற்றுகிறார்
சென்னை.
தமிழக அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு முதல்முறையாக ராக்கெட் அறிவியலை அறிமுகம் செய்யும் வகையில் இணைய வழியே நடைபெறவுள்ள தொடக்க நிகழ்வில் பத்மபூஷன் சிவதாணு பிள்ளை பங்கேற்று உரையாற்றவுள்ளார்.
கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளிடம் ராக்கெட் அறிவியல் தொழில்நுட்பத்தை முதல்முறையாக அறிமுகப்படுத்துகிற நிகழ்வின் தொடக்க விழா இன்று (ஜன-26, புதன்கிழமை) மாலை 6 மணிக்கு இணைய வழியே நடைபெறவுள்ளது.
இத்தொடக்க விழாவிற்கு பள்ளிக் கல்வி ஆணையர் கே.நந்தகுமார், ஐஏஎஸ் தலைமையேற்கிறார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ், ரஷ்யன் மையத்தின் அறிவியல் மற்றும் கலாச்சார இயக்குநர் ஜென்னடி ரொகாலிவ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
இந்நிகழ்வை பிரம்மோஸ் ஏரோபேஸ் நிறுவனத்தின் தலைவரும் ஏவுகணை விஞ்ஞானியுமான பத்மபூஷன் ஏ.சிவதாணு பிள்ளை தொடங்கி வைப்பதோடு, ராக்கெட் அறிவியல் தொழில்நுட்பத்தின் சிறப்புகள் குறித்தும் உரையாற்றவுள்ளார். 15 இணைய வழி நிகழ்வுகளாக நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பங்கேற்று, சிறந்த அறிவுத்திறனை வெளிப்படுத்தும் குழந்தைகள் ரஷ்யாவிற்கு அழைத்துச்செல்லப்பட இருக்கிறார்கள்.