உலக சுகாதார தினத்தை முன்னிட்டு ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் 'நமது பூமி நமது சுகாதாரம்’ எனும் இணைய வழி சுகாதார விழிப்புணர்வு நிகழ்வு நடைபெறவுள்ளது. நாளை (ஏப். 10 - ஞாயிறு) மதியம் 12 மணிக்கு நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் கரோனா போன்ற பெருந்தொற்று பரவல் காலங்களில் மக்களிடம் சுகாதார விழிப்புணர்வை உண்டாக்கும் நோக்கில் பல்வேறு சுகாதாரம் தொடர்பான நிகழ்வுகளை இணைய வழி முன்னெடுத்து நடத்தியது. இந்த நிகழ்வுகள் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கும் மிகுந்த பயனை அளிப்பதாக அமைந்தன. அதன் தொடர்ச்சியாக, கடந்த ஏப். 7 உலக சுகாதார தினத்தையொட்டி ‘நமது பூமி நமது சுகாதாரம்' எனும் இணைய வழி சுகாதார விழிப்புணர்வு நிகழ்வு நாளை (ஞாயிறு) மதியம் 12 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தமிழக அரசு சுகாதாரம் தொடர்பாக மேற்கொண்டுள்ள செயல்பாடுகள் பற்றியும், அதில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஆற்ற வேண்டிய செயல்பாடுகள் பற்றியும் 'நலமான தமிழகமே வளமான தமிழகம்' எனும் தலுப்பில் உரையாற்றுகிறார்.
மேலும், சிம்ஸ் மருத்துவமனை சமூக மருத்துவம் மற்றும் தொற்றுநோய்கள் துறை தலைசர் டாக்டர் பெ.குகானந்தம், உடல் ஆரோக்கியம் மற்றும் சுகாதார செயல்பாடுகள் குறித்தும், டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா சார்பில் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள சுகாதார விழிப்புணர்வு செயல்பாடுகளைப் பற்றி டாக்டர் ஜோட்ஸ்னா ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.